இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் 106 ஓட்டங்களையும் குர்பாஸ் 53 ஓட்டங்களையும் ரஹமத் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் ராஜித, தனஞ்சய லக்ஷான், லஹிரு குமார மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 38 ஓவர்கள் நிறைவில் 234 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 85 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாரூக்கீ 4 விக்கெட்டுகளையும் குல்பதீன் நய்ப் 3 விக்கெட்டுகளையும் யாமீன் அஹமட்ஷாய் 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 120 பந்துகளில் 11 பவுண்ரிகள் அடங்களாக, 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இப்ராஹிம் சத்ரான் தெரிவுசெய்யப்பட்டார்.

Share.
Exit mobile version