இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 300பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலோர் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென சியாஞ்சூர் நிர்வாகத்தின் தலைவர் ஹெர்மன் சுஹர்மன் கூறினார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (திங்கள்கிழமை) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல வினாடிகள் தாக்கியதாக வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவில் இருந்து தென்கிழக்கே 75 கிமீ தொலைவில் உள்ள மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது, மேலும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிலர், ஜகார்த்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களை விட்டு வெளியேறினர். மற்றவர்கள் கட்டடங்கள் குலுங்கியதாகவும், தளபாடங்கள் நகர்வதையும் உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.