கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கொரியாவின் சைமோல் மன்றம் வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.
சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சூங் (Lee Seung) மற்றும் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சைமோல் மன்றம் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (17) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்தனர்.
தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி சியோல் நகரில் இலங்கையர் ஒருவர் உட்பட மேலும் பலரின் உயிரிழப்புக்கும் மற்றும் பலர் காயமடைவதற்கும் காரணமான அனர்த்தம் தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுநோய் நிலைமைகளின் போது கொரிய அரசாங்கம் மற்றும் மக்கள் வழங்கிய உதவிக்காக பிரதமர் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் உயர் கல்வி வாய்ப்புகள்/பயிற்சித் நிகழ்ச்சித்திட்டங்களையும் பெரிதும் பாராட்டினார். இலங்கையர்களின் திறன் விருத்தி மற்றும் பயிற்சி வாய்ப்புகளுக்காக வழங்கப்படும் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும், தொடர்ந்தும் வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறும் அவர் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
சைமோல் கருத்திட்டம் ஒரு சமூக அபிவிருத்தித் திட்டம் என்றும், விவசாய உற்பத்தி, வீட்டு வருமானம், கிராமிய வாழ்க்கை, மக்களை வலுவூட்டுதல் மற்றும் பெண்களின் பங்கேற்பு மூலம் கிராமிய சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பங்களிப்பதாகவும் திரு. லீ சூங் தெரிவித்தார். சைமோல் மன்றம் சப்ரகமுவ மாகாண சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், எஹெலியகொட பஹலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ரம்புக்கன பிடியேகம கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
திருகோணமலை மற்றும் நுவரெலியாவிலும் விரைவில் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சைமோல் மன்றத்தின் தலைவர், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களுக்கு உதவுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கொரியா நாட்டின் தூதுவர் வூன்ஜின் ஜியோங், தூதுக் குழுவின் பிரதித் தலைவர் லிம் மியோங், சைமோல் மன்றத்தின் இலங்கை அலுவலக பணிப்பாளர் சோய் சுங் வூ, அதன் பணிப்பாளர் குவோன் லூங்மின், உதவிப் பணிப்பாளர்களான வென்போ கியோங் மற்றும் கிம் போமின் ஆகியோர் பங்குபற்றினர்.