துருக்கியின் மத்திய இஸ்தான்புல்லின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 81பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி சுமார் 16:20 மணியளவில், தக்சிம் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு கடை வீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக துருக்கிய நகர ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.
சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.
மேலும், வெடிகுண்டை விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் இந்த தாக்குதலுக்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (Pமுமு) பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினார்.
துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே முன்னதாக, இந்த குண்டுவெடிப்பு ஒரு பெண்ணால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் கூறினார்.
இஸ்தான்புல்லில் ஒரு ஊடகசந்திப்பில், இதுவொரு கொடூர தாக்குதல் எனவும் பயங்கரவாதத்தின் வாசனை காற்றில் இருப்பதாகவும் கூறினார்.
நீதி அமைச்சர் பெகிர் போஸ்டாக் துருக்கிய ஊடகத்திடம் கூறுகையில், குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கதிரையில் 40 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருந்தார்.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்பது ஒரு போராளிக் குழுவாகும், இது துருக்கிக்குள் ஒரு சுதந்திர குர்திஷ் அரசைக் கோருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இதை பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றன.
எனினும், இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.