உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை பிற்போடுவதற்காகவே அரசாங்கம் எல்லை நிர்ணய சபையினை ஸ்தாபித்து அதன் மூலம் பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் நாட்டில் ஏற்பட்டிருந்த மக்கள் போராட்டத்தை காரணம் காட்டி மேலும் ஒருவருடத்திற்கு குறித்த தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என்றும் அவர் சாடியுள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு சென்றால் அரசாங்கம் அதில் தோல்வியை சந்திக்கும் என்ற அச்சத்தினால் இவ்வாறு தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளில் ஆளுந்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உரிய காலத்தில் இனி தேர்தல் நடத்தப்படாவிட்டால், அதற்கு எதிராக தாம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version