மனித அபிவிருத்தியில் இதுவொரு மைல் கல் என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள், எதிர்வரும் 15ஆம் திகதியன்று உலக சனத்தொகை 800 கோடியை அடையும் என்று கணக்கிட்டுள்ளது.
உலக சனத்தொகை, 700 கோடியில் இருந்து 800 கோடியாக உயர்வதற்கு 12 வருடங்கள் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா, 900 கோடியாக உயர்வதற்கு இன்னும் 15 வருடங்கள் எடுக்கும் என்றும் கணித்துள்ளது.
பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிநபர் சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பது மற்றும் சில நாடுகளில் அதிக மற்றும் நிலையான கருவுறுதல் நிலைகளின் விளைவாகவே சனத்தொகை அதிகரிப்பதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
நமது மனித குடும்பம் பெரிதாக வளரும்போது, அது மேலும் பிளவுபடுகிறது என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர் என்றும் கடன், கஷ்டங்கள், போர்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து நிவாரணத்துக்காக வீடுகளை விட்டு வெளியேறும் பதிவு எண்ணிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.
ஒரு சில கோடீஸ்வரர்கள் உலகின் ஏழ்மையான பாதிப் பகுதியினரின் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள் எனவும் முதல் ஒரு சதவீதம் பேர் உலக வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.