ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவருமாக நான்கு பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று (10) கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 60 தங்கப்பவுண் நகைகள் மற்றும் ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் காரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வேலணை உள்ளிட்ட பிரதேசங்களில் பகல் நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்ற வேளைகளில் வீடு உடைந்து நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களிடமிருந்து திருட்டு நகைகளை கொள்வனவு செய்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 60 பவுண் நகைகளும் ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டன.

Share.
Exit mobile version