ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியத்தில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 300 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 02 மீன்பிடிப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய் என்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள், இழுவைப் படகுகள் மற்றும் கைதாகிய 10 சந்தேகநபர்கள், இன்று (07) காலை காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சரக்குகளை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, இலங்கை கரையில் இருந்து 10 கடல்மைல் தொலைவில் மீன்பிடிப் படகின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டத்தை அவதானித்த கடற்படை, படகை தடுத்து நிறுத்தியது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, 12 மூடைகளில் பொதியிடப்பட்டிருந்த 300 கிலோகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், குறித்த படகில் இருந்து 6 சந்தேகநபர்களும் குறித்த படகில் இருந்து சரக்கை கரைக்கு கொண்டுவர தயார் நிலையில் இருந்த டிங்கி படகில் இருந்து பெண் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version