குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் (இந்திய ரூபா) ரூ.12 இலட்சம் மாத்திரம் செலவிடப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் (இந்திய ரூபா) ரூ.12 இலட்சம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டவர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த பாலம் 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். சுமார் 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. 143 ஆண்டுகள் பழமையான பாலம் என்பதால் அதனை சீரமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணியை முடிக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை யொட்டி அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவசரகதியில் இந்த பணி நடந்து கடந்த 26 ஆம் திகதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கம்பிகளை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார். இதுதான் 135 பேர் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்து விட்டது.
இதனால் அந்த நிறுவனம் முழுமையாக பாலத்தை சீரமைத்ததா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 இலட்சத்தை மட்டுமே அந்த நிறுவனம் செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது