இலங்கையில் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய 20 வயதுடைய இலங்கையர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட பிற அறிகுறிகளின் காரணமாக அந்த நபர் கொழும்பு ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போதே, அவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளின்படி, குரங்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண முடிந்ததாகவும் இதனையடுத்து, அவர் தற்போது ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.