பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாமல் குமார ஒரு நாற்காலியில் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் பல படங்கள் மற்றும் காணொளிகள்; சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதே நேரத்தில் ஒரு பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டுவதையும் அந்த காணொளி காட்டுகிறது.

பெண் ஒருவர் வரகாபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் குமார கைது செய்யப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்குள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர், மேலும் நான்கு பேர் அவரைத் தாக்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாமல் குமார, தம்மை பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறியதாக தெரிவிக்கப்படும் பெண் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, வரக்காபொல பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் வீடொன்று தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக வாரியகொட பகுதிக்கு சென்ற போது குறித்த பெண் உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாக நாமல் குமார வரக்காபொல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், நாமல் குமார ஒருபோதும் பொலிஸாருக்கு எந்தவிதமான இரகசியத் தகவலையோ அல்லது எந்தவித தகவல்களையோ வழங்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாமல் குமாரவை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர், சந்தேகநபர்கள் நேற்று வரக்காபொல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version