நெல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் மலையக மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் அரசாங்கம் வழங்க வேண்டுமமென மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மலையகத்தில் மரக்கறி உற்பத்தி செய்யும் விவாசாயிகளுக்கு 29 ஆயிரம் ரூபாவுக்கே ஒரு மூட்டை யூரியா விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். யூரியா வழங்குவதில் பாராபட்சம் காட்டாமல் மலையக மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாவிற்கு ஒரு மூட்டை யூரியா வழங்க வேண்டும் என்றார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் நெல் உற்பத்தியாளர்களுக்கு வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் மலையகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மரக்கறி உற்பத்தியாளர்களுக்கு வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படுவதில்லை. இது ஒரு பாரபட்ச செயலாகுமென குறிப்பிட்டுள்ள அவர், பாரபட்சம் இல்லாது சகல விவசாயிகளையும் ஒரு தராசில் வைத்து பார்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.