முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல கிராமங்களுக்குள் புகுந்து வரும் காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதார பயிர்களை அழித்துவருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மல்லிகைத்தீவு, தேவிபுரம், கைவேலி, போன்ற கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் புகுந்துகொள்ளும் யானைகள், தென்னை மரங்கள், வாளை, பலாமரங்கள் என பயன்தரு மரங்களை அழித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது காலபோக நெற்செய்கை தொடங்கியுள்ள நிலையில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் படை எடுக்கின்றன. நீண்டகாலமாக யானைவேலி அமைத்து தருவதாக பலர் வாக்குறுதிகள் கொடுத்தும் இதுவரை யானை வேலி அமைத்துக்கொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
கல்மடு தொடக்கம் இடைக்கட்டு வரையிலான 30 கிலோமீற்றருக்கான யானை வேலி அமைக்கும் திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளபோதும் அது கைவிடப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன.
கிராமங்களுக்கான யானைவேலி இல்லாததினால் காட்டு யானையினால் ஆண்டுதோறும் வாழ்வாதார பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.