பாடசாலை மாணவனை விபத்துக்கு உள்ளாக்கிவிட்டு, தப்பியோடி தலைமறைவான நிலையில் இருந்த ஓட்டோ சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
கினிகத்ஹேன பொலிஸாரினால் ஓக்டோபர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர், ஹட்டன் மாவட்ட நீதவான் பாருக் டீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்போதே, எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான 26 வயதான நபர், யட்டியந்தோட்டையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
கினிகத்ஹேனையில் பாடசாலை மாணவன், வீதியை கடக்க முயன்றபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும் பாதிக்கப்பட்ட மாணவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதாகக் கூறி, அந்த மாணவனை அதே ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற சாரதி, அவரிடம் 5,00 ரூபாவை கொடுத்துவிட்டு, மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல், இடைநடுவிலேயே இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
எனினும், மாணவனின் முறைப்பாட்டுக்கு அமைய சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.