இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்களா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த குண்டுவெடிப்பு சந்தேகத்திற்குரிய சம்பவம் என்பதை அவதானித்த தமிழக பொலிஸார், குறித்த வெடிப்பு பயங்கரவாதச் செயலா என கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போதே, 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை நடத்த சந்தேகநபர் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, கோனியம்மன் கோவிலில் இருந்து தாக்குதலைத் தொடங்கி அதன்பின்னர், கோவையில் உள்ள கோட்ட ஈஸ்வரன் கோவிலை தாக்க திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர், சில வருடங்களுக்கு முன்னர் பல வெடிகுண்டுகளை நடத்த முயற்சித்ததாகவும் ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளிக்கொணர முடியாத காரணத்தினால் பொலிஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரிதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடைய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு கிளையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவரே இந்த தாக்குதலை நடத்தியவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தொடர்புடைய முகமது அசாருதீனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share.
Exit mobile version