இலங்கையில் நிலவும் மருந்து பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் சுகாதாரச் சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவசர மற்றும் பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் ஒக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், பல சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இரத்த மாற்று சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தோட்ட மக்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகவும், தரமான சுகாதார சேவையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்துக்குள் தோட்டங்களில் உள்ள நான்கில் மூன்று குடும்பங்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தொற்றா நோய்களான இதய நோய், நீரிழிவு, மனநோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெறுவதில் கணக்கெடுப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு குடும்பத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், சத்திரசிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டதால் கணக்கெடுப்பில் பங்கேற்ற குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.