இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது. எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே இவ்வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனும், உலக வங்கியின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளனர். அதேபோல் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ என கூறினார்.

Share.
Exit mobile version