வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று (08) பிற்பகல் வேளையில், கிழக்கு, மத்திய வங்காள விரிகுடாவில் இது சூறாவளியாக உருவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை அந்த பகுதிகளில் பல நாள் மீன்பிடி படகுகளை இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுமென கூறப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, குறித்த பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பலநாள் மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Share.
Exit mobile version