ஈரானின் வடக்கு தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கைதிகள் உயிரிழந்தனர் மற்றும் 61பேர் காயமடைந்தனர்.

ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என நம்பப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், சிறைச்சாலை அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதிக்கு ஈரானிய சிறப்புப் படைகள் செல்வதைக் கண்டதாகவும் 1500தஸ்விர் என்ற ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் முழுவதும் பல வாரங்களாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் ஈவின் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் நிலைமைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

சிறைச்சாலைக்குள் இருந்து பேசிய தெஹ்ரானின் ஆளுனர் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், சிறைச்சாலையில் சிறு குற்றவாளிகள் இருக்கும் பிரிவில் கலவரம் நடந்ததாகவும், தற்போது நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், சிறையில் இருக்கும் உயர் அரசியல் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துவிட்டு அதிகாரிகள் வேண்டுமென்றே சிறைக்குத் தீ வைத்ததாக சில ஊடகவியலாளர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டியுள்ளனர். ஈரானின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சனியின் மகன் மெஹ்தி ஹஷேமி ரஃப்சஞ்சனிக்கு முன்கூட்டியே தற்காலிக விடுதலை வழங்கப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவலர்களுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சிறைக்கலவரத்திற்குப் பிறகு கண்ணிவெடிகள் வெடித்ததால் வெடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

முதலில், தீ விபத்திற்கு மத்தியில் தப்பிக்க முயற்சித்த சில கைதிகள் சிறையின் வடக்குப்பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் சிக்கிக்கொண்டதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்ட நிலையில், பின்னர் தங்களுக்கு கிடைக்கும் தகவலின்படி யாரும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை என்று தெரிவித்தது.

கடந்த மாதம் மாசா அமினி என்ற குர்திஷ் இனப் பெண் பொலிஸ் காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version