அவசர காலச் சட்டம் என்றால் என்ன?

இயற்கை அனர்த்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நாட்டில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தினால் சாதாரண சட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என கருதும் போது, அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்படும்.

பாதுகாப்பு விடயங்கள், பொருளாதார விடயங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணிகளினால் அரசாங்கத்திற்கு சாதாரண சட்டங்களின் ஊடாக அதனை சமாளிக்க முடியாத நிலைமை வரும் போது, மேலதிகமான அடக்குமுறை சட்டமே, இந்த அவசரகால சட்டமாகும்.

ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி அவசரகாலச் சட்ட விதிகளின் படி ஒரு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட பிதேசத்திலோ அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பார்.

அப்படியான அறிவித்தல் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அதனை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் வேண்டும். கால நீடிப்பு நாடாளுமன்றத்தால் தேவை ஏற்பட்டால் தீர்மானம் மூலம் செய்யப்படும்.

இந்தக் காலத்தில் பத்திரிகைகள் பிரசுரங்கள் அரச அதிகாரியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட வேண்டும். மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும். காவல்துறைக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரம் போன்றவை வழங்கப்படும்.

அவசர கால சட்டம் என்பது எவ்வளவு ஆபத்தானது

இலங்கையில் முதலாவது அவசரகால சட்டம் 1953இல் கொண்டுவரப்பட்டது, அதற்கான காரணம் 25 சதத்துக்கு இருந்த ஒரு கொத்து அரிசியை 70 சதமாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக இடதுசாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 15 முறைக்கு மேல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் குறித்து நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயம் வருமாறு,

நாட்டின் பாதுகாப்புக் கடமையிலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை ஆகிய தரப்பின் எந்தவொரு உறுப்பினராலும், எந்த நேரத்திலும் யாரையும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.

கைதுக்கு முன்பதாக பின்னதான விசாரணை என்ற கதைக்கே இடமிராது. எந்த வழியிலும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு. இதன்போது யாராவது தப்பிப்பதற்கு முயன்றால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான முழு அதிகாரமும் உண்டு.

ஒருவரை சந்தேக நபராக கருதுவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம், கடமையிலுள்ள எந்தவொரு ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அதிகாரம் உண்டு.

கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இலங்கையைப் பொறுத்தவரை இல்லை என்பது முக்கியமான விடயம்.

தேவை ஏற்படின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் வைத்து விசாரிப்பதற்கான அதிகாரம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர்க்கு உண்டு.

இலங்கையில் நீண்டகாலம் விசாரணைகள் இல்லாமல் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் அடங்குவோர் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளம்: TamilWin

 

Share.
Exit mobile version