கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை நகரமான உடுப்பியில் ஹிஜாப் சர்ச்சை காரணமாக கடந்த 10 மாதங்களாக இந்த மாணவிகளின் வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. தங்களின் பேச்சால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் அம்மாணவிகளில் பலர் பேசத் தயங்குகின்றனர்.

உடுப்பி மற்றும் அதற்கருகில் அமைந்துள்ள மணிப்பால் ஆகிய இரு நகரங்களும் அரபிக்கடல் திசையில் அமைந்துள்ள முக்கியமான கல்வி நகரங்களாகும். இந்த இரு நகரங்களும் இன்னும் பல காரணங்களுக்கு துடிப்புடனேயே உள்ளது. கடந்தாண்டு அரசு ஜூனியர் கல்லூரி ஒன்றில், ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி நிர்வாகம் தடுத்ததற்கு எதிராக ஆறு மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்திற்கு எதிராக சில மாணவர்கள் காவித்துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதன் சுவடுகள் இன்றும் தெளிவாகவே தென்படுகின்றன.

இதையடுத்து, இவ்விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது, இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு இருப்பதால் ஊடகம் முன்பு பேச வேண்டாம் என அம்மாணவிகளின் வழக்குரைஞர்கள் அறிவுறுத்தியிருந்ததால் அப்போதிலிருந்து அவர்கள் பொதுவெளியில் பேசாமல் இருந்தனர். ஆனால், அந்த போராட்டங்களால் எதிர்பாராமல் உருவான விளைவுகளால் பல மாணவிகளின் வாழ்க்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

பல மாணவிகள் ஹிஜாப் அணிவது அனுமதிக்கப்பட்ட வேறு கல்லூரிகளுக்கு சென்றுவிட்டனர். அல்லது ஹிஜாபை தொடர்ந்து அணிவதற்காக வேறு நகரத்திற்கே சில மாணவிகள் சென்றுவிட்டனர். மேலும், படிப்பை பாதியில் கைவிட்டவர்களும் உள்ளனர். கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுக்காக வகுப்பறைகளில் ஹிஜாபை கைவிடுபவர்களும் உள்ளனர்.

பலரும் பொருளாதார ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் பலவற்றை இழந்துள்ளனர். “இல்லை. தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். நாங்கள் பேசுவதற்கு விரும்பவில்லை. எங்களின் கருத்தை வெளிப்படையாக தெரிவித்தால் வருங்காலத்தில் நாங்கள் என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் எங்கள் படிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என, அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மாணவி ஒருவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

“எதையாவது பேசி, அது சர்ச்சையானால் தங்கள் சமூகத்தில் அவர்களின் பெயர் கெட்டுவிடுமோ என சிலர் கவலைப்படுகின்றனர். என்ன முடிவு எடுத்தாலும் எதிர்மறை விளைவுகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்கள் ஹிஜாபை கைவிட்டால், தங்கள் சொந்த சமூகத்தால் தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதேசமயத்தில் வேறு பல காரணங்களுக்காக மற்றவர்களிடமிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது” என, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

சமூக உறவுகள்

இவ்வளவு நடுக்கத்திற்கு மத்தியிலும் அவர்கள் ஹிஜாபை அணிந்தாலும் அல்லது அதனை அணிவதை நிறுத்தினாலும் சிலருக்கு நட்புறவுகள் மாறாமல் இருக்கின்றன.

“எனக்கு நிறைய இந்து தோழிகள் உள்ளனர். என்னிடம் அவர்கள் நிறைய அன்பு செலுத்துகின்றனர். மிகவும் இனிமையாக நடந்துகொள்கின்றனர். இரு வகுப்புகளில் நான் எப்போது ஹிஜாபை அகற்ற வேண்டும், எப்போது அணிய வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் எனக்கு அறிவுறுத்துகின்றனர்” என, டாக்டர் ஜி சங்கர் அரசு கல்லூரி மாணவி ஆயிஷா ரிஃபா அப்துல்ரௌஃப் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

முழுவதும் பெண்கள் பள்ளியிலேயே படித்துள்ள ஆயிஷா ரிஃபா, எம்.காம் படிக்க வேண்டும் என முடிவெடுத்தபோதும் பெண்கள் கல்லூரியையே தேர்ந்தெடுத்தார். ஹிஜாப் குறித்து உயர் நீதிமன்றம் விதிகள் வகுத்தபோது, நடுநிலைப் பள்ளியிலிருந்து அவர் அணிந்துவந்த ஹிஜாபை அவர் கைவிட முடிவெடுத்தார். ஏனெனில், முதுநிலை படிப்பு அந்த ஒரு கல்லூரியில் மட்டுமே இருந்தது.

மற்றொரு கடற்கரை நகரத்தில் முன்பு படித்த அதே கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவர், தன் சொந்த சமூகத்திலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்தால் தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. தன் தோழிகளிடம் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்கிறார் அவர். “என்னைப் பொறுத்தவரை கல்வியும் முக்கியம். சில தியாகங்கள் தேவைதான். ஹிஜாபை அகற்றுவது சரியென நான் நம்புகிறேன்,” என அவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

“என்னுடைய தோழிகளுடன் நான் விடுமுறை நாட்களில் ஒன்றாக வெளியே செல்வேன். முன்பு ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு சென்றபோது எப்படி நடந்துகொண்டார்களோ, அப்படி இயல்பாகவே இப்போதும் நடந்துகொள்கின்றனர். ஹிஜாபை அகற்றிய பின்பும் அவர்கள் இயல்பாக என்னுடன் பழகுகின்றனர். வித்தியாசமாக நடந்துகொள்ளவில்லை,” என, தன் குடும்பத் தோழி ஒருவரின் இல்லத்திலிருந்து அவர் தெரிவித்தார்.

ஆனால், எல்லோருக்கும் நிலைமை இப்படி இருக்கவில்லை. “எங்களிடம் யாரும் பேசவில்லை. எங்களிடம் அவர்கள் பாகுபாடு காட்டுவதை நினைத்து நான் அதிர்ச்சியடைந்தேன். எங்கள் இந்து தோழிகள் எங்களை விட்டு விலகினர்,” என, பிபிசி இந்தியிடம் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மாணவி ஒருவர் கூறினார். தன்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டால் அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் அவருக்கு உள்ளது.


பொருளாதார இழப்புகள்

தங்கள் ஹிஜாபை கழற்ற விரும்பாத மாணவிகள் சிலர், பொருளாதார இழப்புகள் காரணமாக கடுமையான காலத்தை எதிர்கொண்டனர். “ஏற்கெனவே நாங்கள் முழு ஆண்டு கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை கல்லூரியில் செலுத்தியுள்ளோம். ஆனால், வேறு நகரத்தில் வேறொரு கல்லூரியில் சேருவதற்காக மாற்று சான்றிதழ் பெற்றதால், அவை எல்லாவற்றையும் நாங்கள் இழந்துவிட்டோம்” என பட்டப்படிப்பு படித்துவரும், அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மாணவி ஒருவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

“புதிதாக சேரும் கல்லூரியில் அதே அளவுக்கு கட்டணம் செலுத்தினோம். எல்லாவற்றுக்கும் மேலாக, வேறொரு நகரத்தில் நாங்கள் தங்குவதற்கு வீட்டுக்கான கட்டணமும் செலுத்த வேண்டியிருந்தது. இந்த தீர்ப்பு எங்களுக்கு பொருந்தாது. ஏனெனில் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. நாங்கள் அக்கல்லூரியில் சில ஆண்டுகள் படித்திருக்கிறோம். எங்களின் ஆசிரியர்களுக்கோ நிர்வாகத்திற்கோ தகாத செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை,” என அவர் தெரிவித்தார்.

“உண்மையில் எங்களின் ஆசிரியர்கள் எங்களுக்கு நிறைய அன்பையும் கல்வியையும் கொடுத்தனர். ஹிஜாப் இல்லாமல் கல்லூரிக்கு வருமாறு கல்லூரி முதல்வரும் மற்ற ஆசிரியர்களும் கூறினர். ஆமாம், நிச்சயமாக பொருளாதார ரீதியாக எங்கள் பெற்றோருக்கு இது கடினம்தான். ஆனால், இதுவரை நாங்கள் பெற்றதை இழப்பது அல்லது ஹிஜாபை அணியும் எங்களின் தனிப்பட்ட விருப்பம் இரண்டுக்கும் இடையில் எங்களின் தேர்வு இருந்தது. எனவே, நாங்கள் அந்த நகரத்திலிருந்து வெளியேறினோம்,” என, தனக்கு பட்டம் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தால் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மாணவி ஒருவர் கூறினார்.

இது நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் கதை.

ஹிஜாப் அணிந்துகொண்டே படிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்ட ஆட்டோ ஓட்டுனர் மகளின் கதையும் உள்ளது.

“ஹிஜாப் பிரச்னை காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்தோம். எங்கள் கல்லூரியில் எதுவும் நடக்கவில்லை. ஹிஜாப் தடையை உயர் நீதிமன்றம் ஏற்றபோது, அது எங்கள் கல்லூரியில் அமல்படுத்தப்பட்டது. அதுகுறித்த சுற்றறிக்கையை வாட்சப்பில் நான் பார்த்த நாளிலிருந்து நான் கல்லூரிக்குப் போவதை நிறுத்திவிட்டேன். இறுதித்தேர்வை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் (Internals) கலந்துகொள்ள முடியவில்லை. ஓராண்டு முழுவதையும் நான் இழந்துவிட்டேன். இதனால் மீண்டும் முதலாம் ஆண்டு படிப்பதற்கு நான் தள்ளப்பட்டேன்,” என சாலிஹத் கல்லூரியின் முதலாம் ஆண்டு பி.காம் மாணவி ஸைஃபா நாஸ் தெரிவித்தார்.

“ஜி சங்கர் கல்லூரியில் நான் 3,000 ரூபாய்தான் செலுத்தினேன், அதுவும் எனக்குத் திரும்பி கொடுக்கப்பட்டது. இங்கு நான் போக்குவரத்து செலவு ரூ.11,000 உட்பட ரூ.26,000 செலுத்தியுள்ளேன். முன்பு பழைய கல்லூரி எனது வீட்டின் அருகே உள்ளதால் நான் நடந்தே சென்றுவிடுவேன். ஆனால், இப்போது புதிய கல்லூரி நகரத்திலிருந்து தொலைவில் இருப்பதால் பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. இக்கல்லூரியில் கட்டணத்திலிருந்து எனக்கு 5% சலுகை அளித்துள்ளனர், தவணை முறையில் கட்டணத்தை செலுத்தவும் என் தந்தையை அனுமதித்துள்ளனர்,” என்கிறார் அவர்.

இப்போதும் தன்னை அதிர்ஷ்டம் மிக்கவராக நினைக்கிறார் அவர். மாற்றுச் சான்றிதழ் வாங்கிய 17 மாணவிகள் வெவ்வேறு கல்லூரிகளில் தங்கள் படிப்பை தொடர்கின்றனர். “தற்போது தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் மூன்று அல்லது நான்கு மாணவிகள் முன்பு படித்த கல்லூரிக்கே செல்கின்றனர்” என்கிறார் ஸைஃபா.

Share.
Exit mobile version