தான் சம்பந்தப்பட்ட செய்தியொன்றை வெளியிடுவதற்காக அரச ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு மறுநாளே தாம் ஊடகத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். செய்தியொன்றை வெளியிடுவதற்காகதுறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அரச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அழுத்தம் கொடுத்ததாக பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்து அமைச்சர்,

அமைச்சின் செயலாளருக்கோ, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ அல்லது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருக்கு அல்லது அதிகாரிக்கோ ஒரு வார்த்தையாயினும் அது தொடர்பில் கூறியிருந்தால், அதனை எவராயினும் நிரூபித்தால் தாம் ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியை வெளியிட்ட நிறுவனம் அதனை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு மற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடக சகோதரர்களுடன் தாம் உயரிய ஊடக தாற்பரியத்துடன் பயணிப்பதற்கு தயாராகி வரும் நிலையில் இத்தகைய செய்திகளை வெளியிடுவது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version