வவுனியா சுந்தரபுரம் அ. த. க பாடசாலைக்கு முன்பாக இன்று (12) பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா சுந்தரபுரத்தில் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்துக்கு நீதி கோரியும், அதிகரித்திருக்கும் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரியுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (07.10) பாடசாலை ஆசிரியை ஒருவர், பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் விபத்தினை ஏற்படுத்தியிருந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாரினால் இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும், சுந்தரபுரம் பகுதியில் அதிகரித்திருக்கும் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரியும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பேனை பிடிக்கும் கையில் போதை எதற்கு, அநீதி வாழும் காலம் இதுவா?, சட்டத்தை காப்பவனே குற்றத்திற்கு துணை போகலாமா?, நாளைய தலைமுறைக்கு போதைவஸ்து ஏன் போன்ற பதாதைகளை ஏந்தியவாறான நீதிக்கான போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரனும் கலந்து கொண்டிருந்தார்.