நியூசிலாந்து நாட்டின் சாத்தம் தீவு பகுதியில் பைலட் வகையை சேர்ந்த 500 திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கி உள்ளன. இதுபற்றி அரசு கூறும்போது, கடந்த வெள்ளிக்கிழமை 250 பைலட் திமிங்கிலங்கள் சாத்தம் தீவிலும், அதற்கு 3 நாட்கள் கழித்து 240 பைலட் திமிங்கிலங்கள் பிட் தீவிலும் கரையொதுங்கின என தெரிவித்து உள்ளது.

இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகம் காணப்படும் என கூறப்படுகிறது. இதனால், அவற்றை காப்பாற்றுவது கடினம். மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்கள் மீது சுறாக்கள் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது.

அதனால், உயிருடன் இருந்த திமிங்கிலங்கள், பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டன. அவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தொழில்நுட்ப கடல்வாழ் ஆலோசகரான தவே லண்ட்குவிஸ்ட் கூறியுள்ளார்.

இந்த முடிவை அவ்வளவு சீக்கிரம் எடுத்து விடவில்லை. ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் இதுவே, மிக இரக்க தன்மை கொண்ட இறுதி வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். அவற்றின் உடல்கள் இயற்கையான முறையில் அழுகுவதற்கு விடப்படும்.

இந்த பகுதியில் கடந்த 1918-ம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையில், 1,000 திமிங்கிலங்கள் வரை கரையொதுங்கின. 2017-ம் ஆண்டில் 700 பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின.

இந்த வகை திமிங்கிலங்கள் 20 அடி நீளம் வரை வளர கூடியவை. சமூக அமைப்புடன் வாழ கூடியவை. அதனால், தன்னுடைய இணை ஆபத்தில் சிக்கும்போது, அதனை இந்த திமிங்கிலங்கள் பின்தொடர்ந்து செல்கின்றன.

கரையையொட்டி உணவு கிடைக்கும்போது, அதனை உண்டபின்பு, வழிதெரியாமல் கரையொதுங்கியிருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனினும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அவை கரையொதுங்குவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி முழுவதும் தெரியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

Share.
Exit mobile version