கொழும்பு, உலக வர்த்தக மையத்தில், ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்தி, பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன், தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்று ராஜபக்ச தரப்பினர் அறிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

திலினி பிரியமாலிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த செய்தியும் அதனுடன் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களும் ஆதாரமற்றவை என்று ராஜபக்ச அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட இரண்டு நிகழ்வுகளில் பிரியமாலியும் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜபக்ச அலுவலகம், குறித்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே, ஷிரந்தி ராஜபக்ஷ அந்த நிகழ்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version