அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள போதிலும் மீன் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடற்றொழில் துறை பாதிக்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட மீன் மீதான தடை நீக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் மீன் ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்த போதிலும் அது மீண்டும் தேக்கமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இதன் காரணமாக மீன்பிடித் தொழில் தொடர்பான ஏனைய வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.

எனவே, இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

எரிபொருள் விலை தொடர்பில் மீனவர்களுக்கு அரசாங்கம் சற்று நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இந்நாட்டு மீனவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய முறையில் நட்டஈடு வழங்கப்படாததால், சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு உரிய முறையில் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version