திருமணத்துக்காக மணப்பெண் தேவையென விளம்பரம் செய்து 2 கோடிக்கு அதிகமான மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹோமாகம குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கம்பஹா உளுகம்பொல பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவர் தனக்கு மணப்பெண் தேவையென பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளதோடு, பத்திரிகைகளில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மணமகன் தேவையென காணப்படும் விளம்பரங்களுக்கும் பதில் வழங்கியுள்ளார்.
இவ்வாறு ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரிடம் திருமண ஆசைகாட்டி 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றதாக குறித்த பெண்ணால் ஹோமாகம குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹோமாகம குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் பாணந்துறை. பகுதியில் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த நபர் தொடர்பில் நாட்டில் பல பொலிஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தோடு அவர் பலரை வெளிநாடு அனுப்புவதாகவும் தெரிவித்து பணமோசடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.