செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி கொம்பனிவீதி ரயில் நிலையத்திலிருந்து ரயில் அனுமதிச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணித்தவர்களிடமிருந்து அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ரயில் அனுமதிச் சீட்டின்றி 129 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொம்பனிவீதி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான இரண்டு நுழைவாயில்கள் காணப்படுவதுடன், அந்த நுழைவாயில்களில் பயணித்தவர்கள் திடீர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், இதன்போது ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை நுழைவாயில் ஊடாக அனுமதிச்சீட்டுகள் இன்றி பயணித்த 129 பேரிடமிருந்தே இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொம்பனித் தெரு ரயில் நிலையத்தில் 18 கனிஷ்ட ஊழியர்கள் இருக்க வேண்டிய போதிலும் தற்போது 06 பணியாளர்கள் மாத்திரமே பணிபுரிவதாகவும் இதன் காரணமாக மற்றைய வெளியேறும் உத்திரானந்த மாவத்தை நுழைவாயிலில் சோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, ரயில் நிலையங்களில் பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகளவில் உள்ளதால், முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து வெளியேறும் நுழைவாயில்களின் தேவையான சோதனைகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லாததால், ஏராளமான பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.