அம்பாறை-சம்மாந்துறை பிரதேசத்தில் நாளாந்தம் காட்டு யானைகளின் தொல்லைகள் காணப்படுகின்றன. இதனால், பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளார்கள்.

இன்று(29) அதிகாலையும் சம்மாந்துறை நெற்புட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள அரிசி ஆலைகளை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது.

மூன்று அரிசி ஆலைகளில் உள்ள மதில் சுவர்கள், நெல் களஞ்சிய அறைகள், முன் வாயிற் கதவு ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு அங்குள்ள நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளன. மேலும் பயன்தரும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர். அதனால், காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இதேவேளை, இன்று காலை 09.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் யானை மற்றும் மனித மோதலை குறைப்பது தொடர்பான வழிகாட்டல் கூட்டமொன்று இடம்பெற்றது.

இதில் விவசாயிகள், பொது மக்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ரீ.ஜெயதீஸனும் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version