கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து தொழிற்சங்கங்களால் எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் ஹர்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளவிய ரீதியாக இடம்பெறும், ஹர்தாலுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து பாடசாலைக்குச் செல்லாது ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய மற்றும் அவர் சார்ந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் இடைக்கால அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் அதில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் யாரும் இடம்பெறக்கூடாது எனவும் தெரிவித்து மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பதவி விலகப்போவதில்லையென கோட்டாபய திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து மகிந்தவும் தனது பதவி விலகல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை வெளியிடவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையிலேயே அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை மறுதினம் 6 ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

Share.
Exit mobile version