ராஜபக்சவின் மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டு விரட்டப்பட்ட பின்னர், தற்போது ராஜபக்ச கைப்பாவையொருவர் ஆட்சியில் உள்ளதாகவும்,அந்த கைப்பாவை அரசாங்கம் பொது மக்களுக்கும் போலவே தேர்தலுக்கும் பயப்படுவதாகவும், அந்த அச்சத்தின் காரணமாகவே பல்வேறு சட்டங்கள்,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மக்கள் ஒடுக்கப்படுகின்றனர் எனவும், எதிர்க்கட்சி என்ற வகையிலும்,ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியிலும் நாம் எந்நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

விவசாயம்,பெருந்தோட்டம்,மீன்பிடி, சுயதொழில் போன்ற அனைத்து துறைகளிலிருந்தும் டொலர்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், உணவில் தன்னிறைவு பெறுவது போல்,உணவுக்கான பெருமதி சேர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,அதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால தொலைநோக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டம்,கடுகம்பளை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று(26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுகம்பளை தொகுதியின் பிரதான அமைப்பாளர் அசங்க பெரேராவினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு ஏராளமான ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

மக்கள் அபிப்பிராயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத தற்போதைய அரசாங்கத்தின் 134 பேர் ராஜபக்ச குடும்பத்தின் திருட்டுகளை காக்கும் அரணாக மாறியுள்ளனர் எனவும்,பல்வேறு அடக்குமுறைகளைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குகிறார்கள் எனவும்,மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாத இச்சந்தர்ப்பங்களிலயே இதுபோன்ற செயல்களை மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

சத்தான உணவின்றி பாடசாலை மாணவர்கள் மயக்கத்தில் கீழே விழும் நேரத்தில் அவர்களுக்கு உதவுவதை விடுத்து அரசாங்கம் பல்வேறு அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்ணீரைச் சொந்தமாக்கிக் கொண்ட மக்கள் மீது மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் இந்தக் கேலிக்கூத்துகளை இந்த அரசாங்கம் நிறுத்தி, மக்களின் குரலுக்கு செவிசாய்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version