அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி வருவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர். மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இம்மாவட்டத்தில் உள்ள வாவிகள், குளங்கள் மற்றும் களப்புக்களில் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளினால் இரைக்குள்ளாவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய அறிவுறுத்துதல்களோ எச்சரிக்கை பலகைகளோ இதுவரையும் வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Share.
Exit mobile version