பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், டுபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார். இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், அரபி ரொட்டி மற்றும், ‘பிங்கர் ரோல்’ ஆகிய இரண்ட வகை உணவுகள், சுடச்சுட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version