மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே போகவிடாமாலும் வெளியிலிருந்து மாணவர்கள் வளாகத்திற்குள் செல்லவிடாமலும் வாசல் கதவை நிர்வாகம் இன்று திங்கட்கிழமை (02) காலை 9 மணிக்குப் பூட்டியதுடன் விடுதியில் தண்ணீர், மின்சாரத்தை தடை செய்துள்ளதையடுத்து நீதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த 29ஆம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து அங்கு விரிவுரையாளரை தடுத்துவைத்து மாணவர்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுத்தரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது .
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அதில் உடனடியாக மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் உடனடியாக வெளியேற முடியாத சூழல் இருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினை உட்பட வாகனப் பிரச்சினைகள் இருக்கின்றன.
இதனால் மாணவர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று காலை கூடி சுமுகமான தீர்வை பெற்றுக் கொள்ள தீர்மானித்த நேரத்தில் இந்த வாசல் கதவைப் பூட்டி இந்த அராஜக செயற்பாடுகளை நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை மிகவும் கண்டிக்கின்றோம்.
அதேவேளை விடுதியில் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை நிறுத்தியுள்ளதுடன உள்ளே இருக்கின்ற மாணவர்கள் வெளியில் செல்ல முடியாது வெளியில் உள்ள மாணவர்கள் உட்செல்ல முடியாது கதவை பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். இதனால் சாப்பாட்டிற்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் உள்ளே உள்ள மாணவர்கள் மலசலம் கழிக்கக் கூட முடியாத இந்த நிர்வாகத்தின் அராஜகம் கண்டிக்கப்படு வதுடன் ஒவ்வொரு மாணவருக்கும் நீதியை நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் என மாணவர் சங்கத் தலைவர் வி.சுரேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை மாணவர்கள் தொடர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு பூட்டிய கதவின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.