நாங்கள் கல்வியினூடாக எங்களுடைய மாணவர்களை கட்டியெழுப்ப வேண்டும் என யோசிக்கும் பொழுது புதிதாக தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னாரை ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுகின்ற வேலை திட்டத்தை ஆரம்பிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் தேசிய பாடசாலையினுடைய நூற்றாண்டு நிறைவின் “உள்ளம்” சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இன்று அரசாங்கத்தினால் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றுகூட்டி நிகழ்வுகளை நடத்துகின்றார்கள் அண்மையில் பிரதானமான அரசியல் கட்சி சுகததாச அரங்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றுகூட்டி மாநாட்டினை நடத்தியிருந்தார்கள்.

இவ்வாறு அவர்கள் ஒன்று கூடி நடத்தும் பொழுது பாடசாலை மாணவர்கள் அதிகளவானவரை இந்த நிகழ்வில் ஒன்றுகூடி இருக்கலாம் என எனது தனிப்பட்ட கருத்து.

இன்று இலங்கையில் இருக்கும் பொருளாதார நிலைமை காரணமாக இளைஞர்கள் யுவதிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம் என்கின்ற சிந்தனையில் இருக்கின்றார்கள் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் வெளிநாடு போவதற்காக ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் கடவுச்சீட்டை பெறுவதற்கு வரலாற்று சாதனை பத்வுசெய்திருக்கின்றது.

இன்று ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டை பெறுவதாயின் நாற்பத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

வெளிநாட்டுக்குச் செல்வதாயின் இன்று கல்வி ஒரு முக்கியமான நிலையில் இருக்கின்றது இன்று பல முக்கியமான நாடுகளுக்கு செல்வதாக இருந்தால் மாணவர்களிடம் அவர்கள் முதலாவது எதிர்பார்ப்பது ஆங்கிலம்.

இன்று தெற்கிலே இருக்கும் மாணவர்கள் படித்து மேலதிகமான வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள் ஆனால் இன்று நம்முடைய மாணவர்களுக்கு செல்ல முடியாத நிலை.எங்களுடைய பல மாணவர்கள் இளைஞர்களாக வந்து இன்று சிறையில் இருக்கின்றார்கள்.

இந்த பாடசாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்ட மூன்றாவது மாடியில் வெளவாலின் தொல்லைகள் அதிகமாக காணப்படுவதாக நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னரே எனக்கு அதனை காட்டினார்கள்.

நாங்கள் இரண்டு கல்வி அமைச்சரிடம் சந்தித்து பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அதனையடுத்து தினேஷ் குணவர்த்தன அவர்களிடம் சந்தித்துக் கேட்டபொழுது அவர்கள் கூறிய விடயம் கல்வி அமைச்சில் 15 லட்சம் கூட நிதி இல்லை.இவ்வாறான ஒரு நிலைமையிலே எமது பிரதேசத்தில் 10 தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பெயர்ப்பலகைகளுக்காக மட்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது ஒரு வேதனையான விடயம்.

இருக்கின்ற பாடசாலைகளை சரியான முறையில் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்ற பொழுது இந்த அரசாங்கம் இந்த விடயத்தை செய்துள்ளது.

நான் வெளிநாட்டில் இருந்து போது பலர் கூறினார்கள் இலங்கையிலே நிரந்தரமான அரசியல் தீர்வு வரும் பட்சத்தில் எங்களுடைய முதலீடுகளை நாங்கள் இலங்கைக்கு செய்வோம்.

இலங்கையில் இருக்கும் மொத்த கடனில் ஒரு 5 வீதம் ஒரு தனி நபரால் கட்டக் கூடிய அளவுக்கு வளர்ந்த தமிழர்கள் உலகத்தில் இருக்கின்றார்கள் இவர்களை கொண்டு எமது பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
இன்று வடக்கு கிழக்கில் நாங்கள் கல்வியினூடாக எங்களுடைய மாணவர்களை கட்டியெழுப்ப வேண்டும் என யோசிக்கும் பொழுது புதிதாக தெரிவு செய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னாரை ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுகின்ற வேலை திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென சொல்லுகின்றார்.

மன்னார் மாவட்டத்தை முழுமையாக இரவு நேரத்தில் இரவு நேர விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று சொல்கின்ற அளவுக்கு இன்று இந்த அரசாங்கத்தினுடைய புதிய இராஜாங்க அமைச்சர்கள் வந்திருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் மாணவர்களினுடைய கல்வி வளர்ச்சியின் ஊடாக எமது மாணவர்களுடைய எதிர்காலத்தை தமிழர்கள் எதிர்காலத்தை பலப்படுத்த வேண்டும் என நினைக்கும் பொழுது இவ்வாறான மோசமான விடயங்களை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இன்று நாங்கள் தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை பார்த்தால் புதிதாக கொழும்பில் அமைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் திறப்பு விழா இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த கோபுரத்திற்கு நுழைவதற்கான அனுமதிச்சீட்டில் தமிழ் மொழி இல்லாத அளவிற்கு இன்று வந்துள்ளது சீன மொழி, ஆங்கில மொழி, சிங்கள மொழி உள்ளது.நாங்கள் தமிழ், தமிழ் என எமது உரிமைகளுக்காக போராடுகின்றோம் ஆனால் அரசாங்கத்தினுடைய முக்கியமான திறப்புவிழா தினத்திலேயே சீன மொழியில் இருக்கின்றது ஆனால் இதற்கு சீன தூதுவர் தெரிவித்திருக்கின்றார் இது பொய்யான விடயம் என்று.கடந்த காலங்களில் இருந்த உதாரணங்களைப் பார்த்தால் அதாவது காலிமுகத்திடலில் உள்ள போர்ட்சிட்டியில் தமிழ்மொழி இல்லாமல் பெயர்ப்பலகை இடப்பட்டிருந்தது.

அதைப் போன்றுதான் இதனையும் அவர்கள் அவ்வாறு செய்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்ததன் பிற்பாடு அதனை மாற்றி இல்லை இல்லை இது பொய்யான விடயங்கள் என கூறலாம். ஆனால் இன்று தமிழனுக்கும் தமிழ்மொழிக்கும் இந்த நிலைமைதான் இந்த நாட்டில் இருக்கின்றது.

இதனை மாற்றியமைப்பது மாணவர்களுடைய கல்வியினூடாக முடியும்.
அதே நேரத்தில் நாங்கள் முழுமையாக போராடி ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதாக இருந்தால் இலங்கையினுடைய பொருளாதாரத்தை நாங்கள் மாற்றி அமைத்து அதனூடாக தமிழர்களுடைய பொருளாதாரத்தையும் எதிர்காலத்தில் மாற்றி அமைக்கலாம்.

Share.
Exit mobile version