உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டார்.

அந்த பயணத்தின் ஒரு பகுதியான இஸியம் நகருக்கு அவர் சென்றார். போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த நகரின் எரிந்துபோன நகராட்சி தலைமையகம் எதிரே உக்ரைன் கொடி ஏற்றி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போர்க்களப் பயணத்திற்குப் பிறகு ஸெலென்ஸ்கியின் கார் வியாழக்கிழமை அதிகாலை மற்றொரு வாகனத்துடன் மோதியது, இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் நிகிபோரோவ் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய ஸெலென்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக அவரை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் வாகன ஓட்டுநருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நிகிபோரோவ் கூறியுள்ளார்.

ஸெலென்ஸ்கிக்கு உடலில் எங்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. மேலும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நிகிபோரோவ் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version