மின் கட்டணத்தை செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவருமான ஓமல்பே சோபித தேரருக்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (11) பதிலளித்துள்ளார்.

மின் அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை செலுத்த முடியாது என்று ஓமல்பே சோபித தேரர், சனிக்கிழமை (10) எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

தமது பிரதேச மக்களுக்காக இரவு 10 மணிவரை மின்விளக்குகளை ஒளிரச் செய்வதாகவும் 58 ஆயிரம் ரூபாயாக இருந்த மின் கட்டணம் தற்போது 3 இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின்சாரசபை தமது நட்டத்தை ஈடு செய்யவே கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும் இதற்கு காரணம் அரசியல் செய்யும் திருடர்களே என்றும் அவர்களே இந்த நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தாங்கள் திருடவில்லை என்றும் திருடகளின் செயல்களுக்கு தாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், மின் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றார்.

தேரர் கருத்து வெளியிட்ட வீடியோவை தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்ட அமைச்சர் காஞ்சன, துரதிர்ஷ்டவசமாக, வீடியோவில் கூறப்பட்டுள்ள அரசியல் வகைக்குள் தேரரும் வருவதாகவும் மின் கட்டணத்தை செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version