பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற போது அவரை சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வெலிக்கடை சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவை சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் பிரிவுக்கு சனிக்கிழமை (10) சென்ற ஹரிணி எம்.பியை, 45 நிமிடங்கள் சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என எம்.பி தெரிவித்திருந்தார்.

நடிகை தமிதாவை சந்திக்க சென்றமையை தடுத்ததன் மூலம் குறித்த அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினருக்கான தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஹரிணி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்திடம் இருந்து, குறித்த அறிக்கையை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கோரியுள்ளார்.

ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version