கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத்துடன் முன்னிட்டு,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கேட்டிருந்தன.சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டிருந்தன.சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறையை பொருத்தமான காலவரையறையுடன் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தன.

இது நடந்து சரியாக 20 மாதங்கள் ஆகிவிட்டன. மேற்படி கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்த பல விடயங்களை அதன்பின் வெளிவந்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை பிரதிபலித்தது.அது தமிழ்மக்களுக்கு உற்சாகமூட்டும் ஒன்றாகவும் காணப்பட்டது.ஆனால் ஜெனிவா தீர்மானத்துக்குரிய சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது அது தமிழ்மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியுமளிக்கும் ஒன்றாக காணப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையர்களின் அறிக்கைகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்குடன் காணப்படும்.ஆனால் ஜெனிவா தீர்மானங்கள் அவ்வாறு அரசாங்கத்தை வெளிப்படையாகவும் கடுமையாகவும் கண்டிக்கும் தொனியில் அமைவதில்லை.இவ்வாறு மனிதஉரிமைகள் ஆணையர்களின் அறிக்கைகளுக்கும் ஜெனிவா தீர்மானங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி என்பது தமிழ்மக்களைப் பொறுத்தவரை,ஐநாவை நோக்கிக் காத்திருப்பதில் நம்பிக்கையிழக்கப் போதுமான காரணங்களை கொண்டிருக்கின்றது.

இம்முறையும் கடந்தவாரம் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளி வந்திருக்கிறது. அதில் தமிழ்மக்களுக்கு உற்சாகமூட்டும் அம்சங்கள் உண்டு. ஆனால் நிச்சயமாக ஜெனிவா தீர்மானத்துக்கும் அந்த அறிக்கைக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கத்தான் போகிறது. ஒருபுறம் இந்த இடைவெளி தமிழ் மக்களுக்கு விரக்தியூட்டுவது.ஆனால் இன்னொரு புறம் அதுதான் உலக அரசியல் யதார்த்தம்.ஏனெனில் ஜெனிவா எனப்படுவது பிரதானமாக அரசுகளின் அரங்கு.அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவோடுதான் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எனவே உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக தீர்மானங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படும் வழமை அங்கு உண்டு.இந்த முறையும் அதுதான் நடக்கப்போகிறது.

இவ்வாறு ஆணையாளர்களின் அறிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் இடையே காணப்படும் பாரதூரமான அந்த இடைவெளிதான் தமிழ்மக்கள் அதிகம் உழைக்க வேண்டிய ஒரு பரப்பு ஆகும்.

ஆனால் அவ்வாறு உழைப்பதற்குரிய ஒரு பொதுவான ஒன்றிணைந்த கட்டமைப்பு எதுவும் தமிழ்மக்கள் மத்தியில் கிடையாது.அதற்குத் தேவையான வெளியுறவுத் தரிசனமும் தமிழ்மக்கள் மத்தியில் கிடையாது. இதுதான் கடந்த 13 ஆண்டுகளாக ஜெனிவாவில் தமிழ்மக்கள் பொருத்தமான வெற்றிகளைப் பெறத்தவறியதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகள் ஒன்றாக கடிதம் எழுதிய பொழுது அது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மேலும் அக்கடிதம், மேற்கத்திய நாடுகளினதும் ஐநாவினதும் கவனிப்பை அதிகம் பெற்றது. ஆனால் அக்கடிதத்தை எழுதிய கட்சிகள் தொடர்ந்து ஐக்கியமாக செயல்படவில்லை.கடிதத்தில் அவர்கள் கேட்டிருந்ததுபோல பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்பதற்காக கடந்த சுமார் 20 மாதகாலமாக தாம் முன்னெடுத்த செயற்பாடுகளை மேற்படி கட்சிகள் தமது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அவை ரகசியமான செயல்பாடுகள், அவற்றைப் பரகசியப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டு தப்பமுடியாது.ஏனென்றால் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போவது என்பது ஒரு கூட்டுவிருப்பம் மட்டுமல்ல. அது நடப்பில் உள்ள உலக அரசியல் யதார்த்தத்திற்கு எதிரான ஒரு செயற்பாடு. அவ்வாறு செயல்படுவதென்றால் அதற்கு ஒன்றிணைந்த உழைப்பு வேண்டும்.அதற்கென்று ஒரு கட்டமைப்பு வேண்டும்.வழிவரைபடம் வேண்டும்.ஆனால் தமிழ்க் கட்சிகள் கடந்த 20 மாதகால பகுதிக்குள் இது விடயத்தில் அவ்வாறான கட்டமைப்புகள் எவற்றையாவது உருவாக்கியுள்ளனவா?

இந்தவிடயத்தில் பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பதனை தர்கபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். கடந்த 20 மாத கால பகுதிக்குள் அதை நோக்கி அக்கட்சி என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று தமிழ் மக்களுக்கு தொகுத்துக் கூற வேண்டும். இது முதலாவது.

இரண்டாவதாக, கடந்த ஆண்டு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்திட்ட கூட்டமைப்பு ஸீரோ டிராப்ட் வெளிவந்ததும் கடிதத்தில் தாம் முன்வைத்த கோரிக்கைகளிலிருந்து நடைமுறையில் பின்வாங்கத் தொடங்கியது.அதுவும் அம்மூன்று கட்சிகளின் ஐக்கியம் உடைவதற்கு ஒரு பிரதான காரணம். அதன்பின் கூட்டமைப்புக்குள்ளும் விரிசல்கள் அதிகரித்தன. கூட்டமைப்புக்கு வெளியே வேறு புதிய கூட்டுக்களும் உருவாக்கப்பட்டன.கூட்டுக்கள் இந்தியாவை நோக்கியும் கோரிக்கைகளை முன்வைத்தன. அக்கோரிக்கைகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் ஒன்றாக முன்வைத்த கோரிக்கைகளுக்கு பொருத்தமானவைகளாகவும் இருக்கவில்லை.மேலும் வெவ்வேறு கூட்டுக்கள் வெவ்வேறு கடிதங்களை ஐநாவுக்கும் மேற்கத்திய தூதரகங்களுக்கும் அனுப்பின, தூதுவர்களையும் சந்தித்து வருகின்றன.

இவையாவும் கடந்த 20 மாத காலப் பகுதிக்குள் நடந்தவை. இம்முறை ஜெனீாவா கூட்டத்தொடரை முன்னிட்டு கூட்டமைப்பின் பேச்சாளர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.குறிப்பாக ஜெனிவா தீர்மானத்தை முன்னகர்த்தும் நாடுகளின் வெளியுறவு கட்டமைப்புகளோடு தான் உரையாடியதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகத்தான் அந்த உரையாடல்களை நடத்தினாரா?அல்லது வேறு எந்த அடிப்படையில் அந்த உரையாடலை நடத்தியுள்ளார்? என்பதனை தமிழ் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

அதைவிட முக்கியமாக தன் சொந்த கட்சிக்கு விளங்கப்படுத்த வேண்டும்.ஏனென்றால் அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை பிரதிபலிக்கவில்லை என்று அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.மேலும் அக்கட்சிகள் வேறு ஒரு கூட்டிற்கூடாக கூட்டுக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. தவிர,கூட்டமைப்பின் பேச்சாளர் பங்காளிக் கட்சிகளை பிரதிபலிக்கவில்லை என்றால் தன் சொந்தக் கட்சியான தமிழரசு கட்சியையாவது பிரதிபலிக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அவர் அது தொடர்பாக உரையாடியதாக தெரியவில்லை. எனவே அவர் குறிப்பிட்ட சில நாடுகளின் வெளியுறவுக் கட்டமைப்புக்களுடன் நடத்திய உரையாடல்களில் யாருடைய பிரதிநிதியாக அங்கே போனார்?எந்த வெளியுறவு அணுகுமுறையின் அடிப்படையில் உரையாடலை நடத்தினார்? என்பவற்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது இரண்டாவது.

மூன்றாவது, கடந்த ஆண்டு எழுதப்பட்ட அக்கூட்டு கடிதத்தில் ஒரு விசாரணைப் பொறிமுறை அல்லது சாட்சிகளையும் சான்றுகளையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறை குறித்த கோரிக்கை இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வாதாடியது விக்னேஸ்வரனின் கூட்டைச் சேர்ந்த கட்சிகள்தான். குறிப்பாக சிவாஜிலிங்கம் அந்த கோரிக்கையை விடாப்பிடியாக அழுத்திக் கொண்டேயிருந்தார்.மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சந்திப்புகளில் ஈடுபட்ட கிழக்கைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் என்னிடம் கேட்டார்..”இவர்கள் ஏன் அந்த பொறிமுறையை பிடிவாதமாக ஆதரிக்கிறார்கள்? அந்த பொறிமுறைக்குள் என்ன இருக்கிறது?” என்று. அவர் அப்படிக் கேட்குமளவுக்கு அந்தப்பொறிமுறையை கூட்டுக்கடிதத்தில் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.இப்பொழுது சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிக்கும் ஒரு அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்துக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அது கடந்த ஆண்டு மூன்று கட்சிகளும் கூட்டாக எழுதிய கடிதத்தில் கேட்டிருந்த ஒரு கட்டமைப்பை போன்றது அல்ல. முதலில் 13 நிபுணர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் நிபுணர்களின் எண்ணிக்கை எட்டாக குறைக்கப்பட்டுள்ளது.முதலில் அது கடந்த ஆண்டு இயங்கத் தொடங்கி பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் அதன் பணியை முடித்துவிடும் என்று கூறப்பட்டது. இப்பொழுது அவ்வாறான கால எல்லைகள் எதைக் குறித்தும் பேசப்படுவதில்லை. அக்கட்டமைப்புக்கு நிதி போதாமல் இருப்பதனால் அதன் செயல்பாடும் வரையறைக்குட்பட்டதாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு மனிதஉரிமைகள் ஆணையரின் அறிக்கையில் அந்த நிதிப்பற்றாக்குறை பற்றி அவர் சுட்டிப்பாக கூறியுள்ளார்.அதாவது கடந்த ஆண்டு மூன்று கட்சிகளும் கேட்டுக் கொண்டது போல ஏதோ ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அக்கட்டமைப்பானது,தாம் வலியுறுத்திய கட்டமைப்பைப் போன்றது அல்ல,மிகப்பலவீனமானது என்பதனை ஏன் இந்த மூன்று கட்சிகளும் ஐநா விடமும் உலகசமூகத்திடமும் ஆணித்தரமாக எடுத்துரைத்தனவா?

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் இணைந்த பொழுது, 2009க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு முக்கியமான ஒருங்கிணைவாக அது பார்க்கப்பட்டது.அது பின்னர் அசிங்கமான விதத்தில் உடைந்து சிதறியது என்பது வேறுகதை.எனினும் அவ்வாறான ஒருங்கிணைப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டது. இப்பொழுது இருபது மாதங்களின் பின் கூட்டுக்கடிதத்தில் கேட்கப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? அல்லது அதை நோக்கி மேற்படி கட்சிகள் எந்தளவுக்கு உழைத்திருக்கின்றன? என்பதனை அக்கட்சிகள் தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ்க்கட்சிகள், முதலில் வாக்களித்த தமது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

Share.
Exit mobile version