எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு மக்கள் எதிர்காலத்தில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

கடந்த பெரும்போகத்தில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையால் நாட்டின் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக உணவு நெருக்கடி ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை, சந்தையில் தற்போது அதிக விலைக்கு விற்கப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் பெறப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை சதொச மற்றும் கூட்டுறவு உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்வதன் ஊடாக விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பெரும் போகத்தில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதி அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒரு மூடை உரம் தனியார் துறையினரால் 37,000 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தடைபட்டுள்ள போதிலும் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு அரசாங்க உர நிறுவனங்களும் தேவையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உரத்தை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version