எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தொடர்பில் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துதொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் நாங்கள் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளையும் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றும் பணிகளையும் செய்யத் தொடங்கிவிட்டோம். அப்பொழுதெல்லாம் முடங்கிக் கிடந்த சாணக்கியன், இப்போது தன் சுயநல அரசியலுக்காக எம்மை விமசர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள், மருத்துவமனைகள், வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், விளையாட்டுக் கழகங்கள் என பல உதவிகளைச் செய்திருக்கிறோம்.

இவற்றில் பலவற்றை அப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் நேரில் பார்த்தே இருக்கமாட்டார். அப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிக்கு எம்மைப்போன்ற மக்கள் சேவகர்களை விமர்சிக்கும் எந்தவோர் அருகதையும் கிடையவே கிடையாது.

பிள்ளையான் அன்றுதொடக்கம் இன்றுவரை தான் கொண்ட கொள்கையில் மாற்றமின்றி, கட்சித் தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அவரது கட்சி நிகழ்வில் நாம் கலந்துகொள்வது தார்மீகக் கடமையும்கூட. நிலைமை அப்படியிருக்கையில், அலரி மாளிகைக்கு அடிக்கடி வந்து எம்மோடு தேநீர் அருந்துவதும், நிலையான அரசியல் கொள்கையின்றி கட்சித்தாவி சுயநலத்துக்காக தமிழ் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதையும் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.“ எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version