ராகுல் காந்தி துவங்கியிருக்கும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் துவக்க விழாவில் தென்பட்ட உற்சாகமும் கூட்டணிக் கட்சியினருடனான நெருக்கமும் பல செய்திகளைச் சொல்கின்றன. ஆனால், தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் யாத்திரை ஏற்படுத்தும் மாற்றமே முக்கியமானது.

ராகுல் காந்தி தலைமையில் இந்திய காங்கிரஸ் கட்சி துவங்கியிருக்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் புதன்கிழமையன்று பிற்பகல் மிகுந்த உற்சாகத்துடன் துவங்கியது. யாத்திரை துவங்குவதற்கு முதல் நாளான செவ்வாய்க் கிழமையன்று, கன்னியாகுமரியில் பெரிதாக யாத்திரை தொடர்பான பரபரப்பு ஏதும் இல்லாத நிலையில், புதன்கிழமை அதிகாலையில் இருந்தே, பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்தன.

காந்தி மண்டபத்திலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்திலிருந்த கடற்கரைச் சாலையில் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுக் கூட்டம் மாலை ஐந்து மணிக்குத்தான் என்றாலும் பிற்பகல் ஒரு மணியிலிருந்தே தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிய ஆரம்பித்தனர்.

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை அளித்து துவக்கிவைக்கும் நிகழ்வு நடந்த காந்தி மண்டபத்தில் முக்கியப் பிரமுகர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேசியக் கொடியைப் பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி சிறிது தூரம் நடந்துவந்து, பிறகு பொதுக்கூட்டம் நடக்கும் மேடையை வந்தடைந்தார்.

இந்தக் கூட்டத்தில் பல தலைவர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் பேசிய பிறகு ராகுல் காந்தி பேசினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தியின் உரை, அவரது கடந்த கால பேச்சுகளின் நீட்சியாகவே அமைந்தது. தேசியக் கொடி, இந்தியா போன்றவற்றின் தத்துவம் என்ன, அவை எப்படி மீறப்படுகின்றன என்பதை அவர் விளக்கினார். தனது பேச்சின் கடைசி சில நிமிடங்களில் மட்டும் பா.ஜ.வை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி.

“இந்த நாட்டில் உள்ள எதிர்கட்சிகளை அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றைக் கொண்டு அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இந்தியர்களை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்தியர்கள் ஒருபோதும் அச்சப்பட மாட்டார்கள். எத்தனை மணி நேரம் நீங்கள் விசாரணை அறையில் வைத்திருந்தாலும் ஒரு நாளும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். இந்திய நாட்டில் எந்தவொரு எதிர்கட்சித் தலைவரையும் இதுபோன்று அடைத்து வைத்து விசாரித்து அச்சுறுத்த முடியாது.

மதம், மொழி போன்றவற்றின் பெயரால் இந்த நாட்டை பிளவுபடுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டார். இதற்கு தொண்டர்களிடம் நல்ல ஆரவாரம் இருந்தது.

ராகுல் காந்தியின் உரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார். பலமுறைநேரடிப் பேச்சுகளை மொழிபெயர்த்த அனுபவம் இருந்தபோதும், ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்க்கும்போது சற்றுத் தவறுதலாகவே மொழிபெயர்த்தார்.

ராகுல் காந்தி பேசி முடித்த பிறகு ஸ்வராஜ் இந்தியாவின் நிறுவனர் யோகேந்திர யாதவ் சில நிமிடங்கள் பேசிய பிறகு, இந்தியில் கோஷங்களை எழுப்பினார்.

கன்னியாகுமரியில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். குறிப்பாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாரம்பரிய தலைப்பாகைகளுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கூட்டம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

கன்னியாகுமரியில் துவங்கப்பட்டிருக்கும் யாத்திரையும் நடத்தப்பட்ட பொதுக்கூட்டமும் பல வகைகளில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தற்போது இந்தியாவில் சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சனையிலும் தள்ளாடிவருகிறது.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்க அந்தக் கட்சிக்கு உற்சாகமூட்டும் நிகழ்வுகள் நிச்சயம் தேவை. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடைபயணத்தைப் பார்க்கலாம். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் தேர்வுசெய்யப்பட்டாலும், மையப் புள்ளியாக ராகுல் காந்தியே இருப்பார் என்பதையும் இந்த நடைபயணம் உறுதிசெய்யும்.

“இது தற்போது நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் தேவையானது. தற்போது இந்தியாவில் மதச்சார்பின்மை மிக மோசமான அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறது. இந்த யாத்திரை 2024 தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும். மேலும் தற்போது காங்கிரஸ் கட்சியில் தலைவரைத் தேர்வுசெய்வதில் சிக்கல் இருக்கிறது. அதனாலும் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறது. இந்த நிலையில் அந்தக் கட்சியில் மக்களை இணைக்கும் ஒரே தலைவர் இவர்தான். ராகுல்தான் இன்னமும் காங்கிரசின் முகம்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். இளங்கோவன்.

இந்த யாத்திரை காங்கிரசிற்கு மிக முக்கியமானது, பலனளிக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் பா.ஜ.க. இந்த யாத்திரையைப் பார்த்து பதறுவதாகச் சொல்கிறார் அவர். “இதன் காரணமாகத்தான் தேசிய அளவில் இந்த யாத்திரையை அந்தக் கட்சிக்காரர்கள் விமர்சிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள். பொருட்படுத்தத்தகாத யாத்திரை என்றால் ஏன் இவ்வளவு பதற வேண்டும்? காங்கிரஸ் தொண்டர்களிடம் இந்த யாத்திரை ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதுதான் காரணம்” என்கிறார் அவர்.

இதுதவிர, இந்த யாத்திரையை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்திருப்பதும் மிக முக்கியமான சமிக்ஞை. தி.மு.க., பாரதீய ஜனதா கட்சியை நெருங்குவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிவந்தன. தமிழ்நாட்டில் நடந்த செஸ் ஒலிம்பியாடின் துவக்க விழாவில் பிரதமர் பங்கேற்றது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த நிலையில், இந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றதும் அப்போது அவரது உடல் மொழியும் கவனிக்கத்தக்கவையாக இருந்தன.

மேலும், யாத்திரையைத் துவங்கிவைத்துவிட்டுச் சென்ற பிறகு, அதனை வாழ்த்தி ட்விட்டர் பதிவு ஒன்றையும் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். “இன்று என் சகோதரர் ராகுல் காந்தி இந்தியாவின் ஆன்மாவை மீட்பதற்கான, நமது குடியரசின் உயர்ந்த விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதற்கான, நாட்டு மக்களை அன்பால் இணைப்பதற்கான பயணத்தைத் துவங்கியிருக்கிறார். இந்த இந்திய ஒற்றுமை பயணத்தைத் துவங்குவதற்கு சமத்துவத்திற்கான சிலை அமைக்கப்பட்டுள்ள குமரியைத் தவிர பொருத்தமான இடம் இருக்க முடியாது.

வகுப்புவாத பிரிவினையும் வெறுப்புப் பிரச்சாரங்களும் மக்களின் மனதைச் சூழ்ந்திருக்கும் நிலையில், இந்தியாவின் மிகப் பழமையான கட்சி, நாட்டை அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் கடினமான பணியில் இறங்கியிருக்கிறது.

நம்முடைய மகத்தான குடியரசுக்கு புத்துயிர் கொடுக்கும் லட்சியத்தில் இந்த யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின்.

Share.
Exit mobile version