எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், எதிர்காலத்தில் விலை குறைவடையுமென குறித்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 450 ரூபாவை எட்டியுள்ள நிலையில், பாண் இறாத்தல் ஒன்றின் விலையினை 350 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோதுமை மா பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், பாண் விற்பனையில் தொடர்ந்தும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், கோதுமை மா பிரச்சினைக்கு வர்த்தக அமைச்சு உரிய தீர்வினைக் காணத் தவறியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, பாண் விலை அதிகரிப்பானது நாட்டின் போஷாக்கின்மை நிலைமையினை மேலும் அதிகரிக்கலாமென ரஜரட்ட ஊழல் எதிர்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே குறித்த சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
போஷாக்கு குறைப்பாடுடைய சிறுவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், கோதுமை மா மூலம் உற்பத்தி செய்யப்படும் ஏனைய உணவு வகைகளின் விலையினை அதிகரிப்பதுடன் பாண் விலையினை குறைக்க வேண்டுமெனவும் ரஜரட்ட ஊழல் எதிர்ப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.