இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இராஜாங்க அமைச்சுக்கென தனியாக நிதி ஒதுக்கப்படாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, நிரந்தர அமைச்சரவை நியமனத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவினால் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள சிலருக்கு வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பே இந்த அமைச்சரவை நியமனத்தில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய 18 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இல்லை எனவும், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே அமைச்சரவையில் இணைவார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Share.
Exit mobile version