சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது.

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், இந்தியா வெறும் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஆரம்பித்த அடுத்தடுத்த கால்பகுதிகளில் இலங்கை அணி அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தியது.

இதன்மூலம் இரண்டாவது கால்பகுதியில் 24-1, மூன்றாவது கால்பகுதியில் 21-7 மற்றும் நான்காவது கால்பகுதியில் 23-4 என இலங்கை அணி புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

எனவே, இறுதியாக இலங்கை அணி 102-14 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை அணியின் புள்ளிகளை பொருத்தவரை முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பில் 75 முயற்சிகளில் 72 புள்ளிகளை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தார்

முதல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.

Share.
Exit mobile version