வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (02) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“நான்கு மாத காலத்துக்கான ஒரு இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்திருக்கின்றார். நீண்ட நாட்களாக வங்குரோத்து நிலையில் இருக்கின்ற நாட்டை கட்டியெழுப்புகின்ற வரவு – செலவுத் திட்டமாக இது இல்லாத போதும், தற்காலிகமான இந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சில நல்ல விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனினும், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில், செலவீனம் 4,427 பில்லியன் ரூபாவாகவும், வருமானம் தரக்கூடிய வழி 2094 பில்லியன் ரூபாவாகவும் காட்டப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. வறுமையினாலும் துன்பத்தினாலும் கஷ்டப்படும் மக்கள் தொடர்பில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தினால் மகிழ்ச்சியடைவோம்.
எனினும், நாட்டு மக்கள் மிகவும் மோசமான பஞ்சத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். ஒருவேளை உணவுக்காக தவிக்கின்ற மிகவும் பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தாயும் இரு பிள்ளைகளும் வறுமையினால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அந்த முயற்சி கைகூடாத நிலையில், அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்துள்ளதாகவும், நேற்று அரச அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இதேபோன்று, எத்தனையோ குடும்பங்கள் அன்றாட வாழ்வுக்காக, உணவுக்காக போராடி வருகின்றனர். பட்டினியால் வாடும் இந்த மக்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். ஆட்சியாளர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியிலே, அவர்கள் இனவாதத்தை விதைத்து அதனூடாக கலவரங்களையும் வன்முறைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்து, சமூக நல்லிணக்கத்தையும் இன சௌஜன்யத்தையும் சாகடித்தனர். ஆட்சிக் கதிரையில் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றைச் செய்தனர். விவசாயிகளின் வயிற்றில் அடித்தனர். இதனால் விவசாயிகள் வீதிக்கு வந்து போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
குறிப்பாக, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தில், தற்பொழுது தலைதூக்கியிருக்கும் மீனவர் பிரச்சினை தொடர்பில், இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது மீனவத் தொழிலுக்கும் விவசாயத் தொழிலுக்கும் தேவையான எரிபொருள் இன்மை பிரச்சினையால் அவர்கள் தொடர்ந்தும் என்னிடம் முறையிடுகின்றனர். விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்கான ட்ரெக்டர்களுக்கு தேவையான எரிபொருள் இன்மையால், அவர்கள் தினந்தோறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அலைமோதுகின்றனர்.
அதேபோன்று, நாட்டின் எதிர்கால சிற்பிகளான மாணவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமை யுனிசெப் (UNICEF) அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருகின்றது.
பொருட்களின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. நாங்கள் ஆட்சியை பொறுப்புக்கொடுத்த போது இருந்த விலையிலும் 300, 400 மடங்கு விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண குடும்பத்தவர் ஒருவர் அத்தியாவசிய பொருட்களைக் கூட நியாயமான விலைக்கு வாங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாடுகள் இன்றில்லை. வியாபாரிகள்தான் விலைகளை தீர்மானிக்கின்ற ஒரு மோசமான சூழல் இன்று உருவாகியுள்ளது. எனவே, பொதுவான திட்டமிடல் பொறிமுறை மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க முயற்சியுங்கள். பொருட்களின் விலையை குறைக்க வழி செய்யுங்கள்.
டொலர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பல இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்து, அவைகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இனாமாக வழங்கப்பட்ட எத்தனையோ கொடுப்பனவுகள், திட்டங்கள் இன்று தடை செய்யப்பட்டிருக்கின்றன.
VAT வரி அதிகரிப்பானது மிகவும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது. அதேபோன்று, மீனவர்கள் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரிக்கப்பட்டுள்ள விலையிலும் மண்ணென்ணெய்யை பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். ஆகையால், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் விடயத்தில் கவனஞ்செலுத்துமாறு அமைச்சர் காஞ்சனவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் என்ற ஆபத்தான சட்டத்தை பயன்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும். அந்த சட்டம் மீளமைக்கப்பட வேண்டும். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்ற வகையில், பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், இளைஞர்கள் இன்னும் சிறையில் காலத்தை கழிக்கின்றனர். எனவே, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அரிசி உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டாம்.
அத்துடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கீழ் அல்லது இராணுவத்தினர் கட்டுப்பாட்டின் கீழ், ஆயிரக்கணக்கான ஏக்கர் பொது மக்களின் காணிகள் அடாத்தாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை மக்களுக்கு விடுவித்து, அந்தக் காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம், பஞ்சத்தைப் போக்க முடியும்.
அதேபோன்று, போதியளவு எரிபொருள் வழங்கப்படாமையால் ஆட்டோ ஓட்டுனர்களும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியாளர்கள், முறையான பொருளாதார திட்டமிடல் இல்லாமல் தங்களுக்கு ஏற்றாற்போல நடந்துகொண்டமையினாலேயே, இன்று நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது சிலர் ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவிகளைக் கேட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அவ்வாறன செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவசரமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு சென்று, மக்கள் விரும்புகின்றவர்களை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்புவதன் ஊடாக மட்டுமே, ஸ்திரத்தன்மையான ஒரு பொருளாதாரத்தை, மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொண்டு வர முடியும். அதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டிக்கொள்கின்றேன்” என்று கூறினார்.