ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே வெளிநாட்டுக் கடன்களை செலுத்தத் தவறியதாக அறிவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது.

நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, “மத்திய வங்கியின் ஆலோசனையின் பேரில் நாட்டின் கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்படும் என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்றோ அல்லது அந்த நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் பாதகம் ஏற்பட்டதாக இந்தச் சபையில் யாராவது நினைத்தால், அந்த முடிவுகளுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மத்திய வங்கியின் ஆளுநரை வெளியேற்ற யாரேனும் விரும்பினால், அதற்குப் பதிலாக நான் செல்லத் தயார்.

அவரது முடிவுகளால் இன்று மக்கள் பயனடைகின்றனர். இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களை வைத்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடு உத்தியோகபூர்வமாக கடனை செலுத்த தவறி திவாலானதாக சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் முன்னர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version