மின்கட்டண உயர்வு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும், அதற்கான செலவை பார்க்கும் போது கட்டண உயர்வு கண்டிப்பாக செய்ய வேண்டியது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மின்சார சபையினால் செய்யக்கூடிய சில பணிகள் கடந்த காலங்களில் வேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர், சபையில் உள்ள மாபியாக்களை எதிர்த்து தாம் தனித்து நின்று போராடிய சந்தர்ப்பங்களும் உண்டு எனவும் தெரிவித்தார்.
மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இந்த நிறுவனங்கள் எவ்வித சேவை மதிப்பீடும் இன்றி வருடாந்தம் 25 வீத சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை நிறுத்தப்பட வேண்டும் எனவும் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.