நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பராமரிக்க சீன நிறுவனத்திற்கு 12 வருடங்களாக செலுத்திய பணத்தில் நாடு மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

குறித்த மின் நிலையத்தை பராமரிக்க இலங்கையின் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இல்லையா என கேள்வி எழுப்பிய அவர், சீன நிறுவனத்தை இன்னும் தக்கவைத்துள்ள காரணத்தால் நுகர்வோர் சுமையை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான சபையை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களை உட்கொள்ள முடியாமல் மரத்தில் இருந்து விழுந்த மனிதனைப் போன்ற நிலையில் இருக்க 64% மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் ஏழை மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டினார்.

முஜுபுர் ரஹ்மான் அவர்கள், ஏழை மக்களுக்கு நிவாரணம் தருவதாகச் சொன்னாலும், அரசால் முன்மொழிவோ, வேலைத்திட்டமோ முன்வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் முறையை உருவாக்காவிட்டால், முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள் என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

Share.
Exit mobile version