லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தலைநகரின் பல பகுதிகளில் சிறிய ரக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர் முழுவதும் கரும் புகை எழுவதைக் காண முடிந்தது.

பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சண்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஐ.நா ஆதரவு தேசிய ஒற்றுமை அரசாங்கம், தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ‘ஜாவியா வீதி பகுதியில் சென்ற ஒரு இராணுவக் குழுவானது, திரிபோலிக்கு மேற்கே 27வேது வாயிலில் ஆயுதக் குழுக்கள் கூடிக்கொண்டிருந்த போது, ஒரு இராணுவக் குழு சீரற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த மோதல்கள் தூண்டப்பட்டன’ என தெரிவித்துள்ளது.

லிபிய செஞ்சிலுவைச் சங்கம், ஒரு ட்வீட்டில் அனைத்து தரப்பினரையும் ‘லிபிய ரெட் கிரசண்ட் அணிகள் நகரத்திற்குள் தங்கள் மனிதாபிமான பணிகளைச் செய்ய ஆதரவளிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வன்முறையை ‘உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.
லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் பி. நோர்லாண்ட், ‘திரிபோலியில் வன்முறை மோதல்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்று லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க வட ஆபிரிக்காவில் உள்ள லிபியா, ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இலவச மருத்துவம் மற்றும் இலவசக் கல்வியுடன் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அதன் செழுமைக்கு வழிவகுத்த ஸ்திரத்தன்மை தற்போது சிதைந்துவிட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு மொஅம்மர் கடாபிக்கு எதிரான நேட்டோ ஆதரவு கிளர்ச்சியைத் தொடர்ந்து லிபியா 2014ஆம் ஆண்டு முதல் போரிடும் பிரிவுகளுக்கு இடையே பிளவுபட்டுள்ளது.

Share.
Exit mobile version